சென்னை: தமிழக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2019-2020ம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு, தனிக் கவனம், ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 556 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 89 ஆயிரத்து 140 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன், இணையப் பாதுகாப்பு, உடல் மற்றும் மனநலப் பாதுகாப்பு, பாலினிப் பாகுபாடு, வளரிளம் பருவக் கல்வி, சுயவிழிப்புணர்வு,பிறர் மனநிலை அறிந்து செயல்படுதல், மன அழுத்தம் மற்றும் மன எழுச்சிகளை கையாளும் திறன் போன்றவை குறித்தும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல், ஆலோசனைகள் வழங்க வேண்டும். உடல் நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக பயிற்சி அளிக்க வேண்டும்.ேதர்வு பயத்தால் மாணவர்கள் இடையே ஏற்படும் தற்கொலை எண்ணங்களை நீக்கும் வகையில் தன்னம்பிக்கை வளர்க்க வேண்டும்.
மேனிலைக் கல்வி முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பாகவும், வேல வாய்ப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சமுதாயத்தில் ஏமாற்றுபவர்களிடமிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, தவறாக வழி நடத்தும் நபர்களை எப்படி இனம் கண்டு கொள்வது என்பது பற்றியும், சரியான தொடுதல், தவறான தொடுதல் என்பது பற்றியும் அறிவுறுத்த வேண்டும்.இயற்கை இடர்பாடுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் வழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கும் வகையில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவில் அந்த புகார்களை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை செயல்படுத்த போதிய நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.


Join Telegram& Whats App Group Link -Click Here