தேசிய பேரிடரான கொரானா பாதிப்பு குறித்து தலைமை ஆசிரியர் மூலம் கேள்விப்பட்ட ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ மாணவியர் தங்களது சேமிப்புப் பணம் முழுவதையும் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இது ஒரு குக்கிராமம். இக் கிராமத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் இப் பள்ளியில் தொடக்கக் கல்வியை கற்று வருகிறார்கள்.
இங்கு பணிபுரியும் தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ், ஆசிரியை கா.ரோஸ்லினா ஆகியோர், மாணவர்களுக்கு கல்வியியுடன் நாட்டுப்பற்று, மனித நேயம், இருப்பதிலிருந்து மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் பண்பு முதலியவற்றை வளர்த்து வருகிறார்கள். அதேபோல, நாட்டில் ஏற்படும் துயர சம்பவங்களில் தங்களது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தையும் சிறு வயது முதலே வளர்த்து வருகிறார்கள்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்தும், மத்திய மாநில அரசு எடுத்து வரும் போர்க்கால நடவடிக்கைகள் குறித்தும் தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் விளக்கியுள்ளார். மேலும் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு உதவி அளிக்க வேண்டிய அவசியம் குறித்தும் மாணவ மாணவியருக்கு விளக்கியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக மாணவ மாணவர்கள் தங்களது சேமிப்பு பணம் முழுவதையும் அளிக்க முன் வந்தனர்.
இப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த தலைமை ஆசிரியர் பிப்ரவரி 2020 முதல் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.
அனைத்துப் பாடங்களிலும் நடத்தப்படும் கற்றல் விளைவுகள் மதிப்பீடு, வளரறி மதிப்பீடு, தொகுத்தறி மதிப்பீடு, தொடர் மதிப்பீடு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்வதெழுதுதல், விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வருதல், விளையாட்டில் முதன்மை, ஓவியம், பொது அறிவு வினாடி-வினா, படைப்பாற்றல், நல்லொழுக்கம், ஆங்கிலம் பேசும் திறன்  (Spoken English), சிறப்புத் திறமைகள், நன்னெறி புகட்டும் செய்யுள் பகுதிகளைப் பொருளுடன் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மாணவர்களுக்கு ஸ்டார் வழங்கப்பட்டு, ஒவ்வொரு ஸ்டாருக்கும் ஒவ்வொரு ரூபாய் உடனுக்குடன் தலைமை ஆசிரியர் தனது சொந்தப் பணத்தில் வழங்குகிறார். இது ஒவ்வொரு மாணவர் பெயர் எழுதப்பட்ட உண்டியலில் சேமித்து வைக்கப்படுகிறது.
பள்ளியில் நன்றாகப் படித்து பாராட்டு பெறும் மாணவன், தான் வசிக்கும் பகுதியில் கெட்ட வார்த்தை பேசினாலோ, வீட்டில் பெற்றோரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டாலோ, அந்த விஷயம் சக மாணவர்கள் மூலம் அறியப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவனின் உண்டியலில் இருந்து ஒரு ரூபாய் எடுக்கப்படும். இதன்மூலம், நல்லொழுக்கத்தையும் மாணவர்கள் பேணும் சூழல் இப் பள்ளியில் உருவாகிறது.
க.காவியா (1ம் வகுப்பு), பொ.சுரேஷ்குமார், வி.யோகமுனீஸ்வரன் (3ம் வகுப்பு), கோ.காளி வைஷ்ணவி (4ம் வகுப்பு), பொ.அனிதா (5ம் வகுப்பு) ஆகிய 5 மாணவ மாணவியரும் பள்ளியில் தாங்கள் படித்து தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்டு சேமித்து வைத்த உண்டியல் பணம் மற்றும் தாங்கள் வீடுகளில் சேமித்து வைத்த மொத்த பணத்தையும் தலைமை ஆசிரியரிடம் கொண்டு வந்து வழங்கினர். மொத்த தொகை ரூ.2367 (ரூபாய் இரண்டாயிரத்து முன்னூற்று அறுபத்து ஏழு மட்டும்) சேர்ந்தது.
இதனை தலைமை ஆசிரியர், முதல்வரின் நிவாரண நிதிக்கு உடனே அனுப்பி வைத்தார்.
இது குறித்து தலைமை ஆசிரியர் கூறுகையில், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் சிறுக சிறுக தங்களது தேவைகளுக்காக (வரும் பங்குனி பொங்களுக்கு துணி எடுக்க) சேமித்து வைத்த பணம் முழுவதையும் அப்படியே கொடுத்துள்ளார்கள். தொகை குறைவாக இருந்தாலும் நாட்டில் ஏற்படும் இதுபோன்ற பேரிடர்களில் அவர்கள் பங்களிப்பும் இருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். மாணவர்கள் கூறுகையில் பங்குனி பொங்கலுக்கு ஆண்டிற்கு ஒரு முறை துணி எடுப்போம். தற்போது பணம் முழுவதையும் கொடுத்துவிட்டோம். பொங்கல் அடுத்த மாதம் (மே) வருகிறது.
இந்த மாணவ மாணவியர் கேரள வெள்ள பாதிப்பிற்கு அம் மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு, கஜா புயல் நிவாரணம் என ஒவ்வொரு முறை நாட்டில் பேரிடர் ஏற்படும் போதும் அதற்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Join Telegram& Whats App Group Link -Click Here