அண்மைக்காலமாக சீனா உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பெரும் பாதிப்பையும் அச்சுறுத்தலையும் உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வரும் கொரனா வைரஸ் தாக்குதல் தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொடிய தொற்று பல வல்லரசு நாடுகளின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டுள்ளது என்றே கூறவேண்டும். 

இந்தியாவில் இதன் தாக்குதல் எதிரொலியாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லி மாநில அரசு தொற்று நோய்களால் அதிகம் பாதிக்கப்படும் பச்சிளம் குழந்தைகளின் நலன் கருதி தொடக்கப் பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை அறிவித்துள்ளது அறிந்த ஒன்று. மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொடுஉணர் வருகையை உறுதிப்படுத்தும் பயோமெட்ரிக் முறையைத் தற்காலிகமாக ஒத்திவைத்து கொரனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

அதுபோல், மத்திய அரசு தம் அனைத்து அலுவலகங்களிலும் கைகள் மூலம் இந்நோய்த்தொற்று உடனடியாகப் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் மறு உத்தரவு வரும் வரை தொடுவுணர் கருவியைப் பயன்படுத்தி வருகையை உறுதிசெய்வதைக் கைவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த வருகைப்பதிவேட்டு முறையினைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் நிலவும் காலநிலையில் இந்தக் கொடும் தொற்று பரவ வாய்ப்பில்லை என்று அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் ஏதுமற்ற செய்தியானது உதவி வந்த சூழ்நிலையில் தற்போது ஓமன் நாட்டிலிருந்து வந்த நடுத்தர வயது மனிதருக்கு நோய்த்தொற்று இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பே தமிழக அரசு, அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களும் ஊழியர்களும் கொரனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்ததும் அரசு எந்திரத்தை முடுக்கி விட்டதும் குறிப்பிடத்தக்கது. 

அனைத்து வகைப் பள்ளிகளிலும் இந்த நோய் குறித்த விழிப்புணர்வை மற்றும் முன்தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை உரிய நேரத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாக விரைந்து எடுக்கப்பட்ட நிகழ்வுகள் பாராட்டத்தக்கவை. இதன் ஒரு பகுதியாக, அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்குத் தக்க கிருமிநாசினி திரவத்தைப் பயன்படுத்திக் கை கழுவும் வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் கற்றுத்தரப்பட்டன. மேலும், டெட்டால் போன்ற தொற்றுநோய்த் தடுப்புத் திரவங்களால் வகுப்பறைகள் அனைத்தும் தூய்மை செய்யப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது.

எனினும், கொரனா குறித்த அச்சம் இன்னும் உலகம் முழுவதும் குறைந்தபாடில்லை. இந்நிலையில், தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளைத் தவிர ஏனைய பள்ளிகளிலும் அரசு அலுவலகங்களிலும் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஆதார் அடிப்படையிலான தொடுவுணர் கருவி கைரேகை வருகைப் பதிவினை மத்திய மற்றும் டெல்லி மாநில அரசுகளைப் பின்பற்றி, தற்காலிகமாக நிறுத்தி வைக்க தக்க ஆணை பிறப்பித்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாநில அரசு முன்வரவேண்டும் என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விருப்பமாக உள்ளது. அதுவரைக்கும் பழைய முறையிலான பதிவேடு வருகையை இவர்கள் மேற்கொண்டு வர தக்க உத்தரவிட்டு உதவிட வேண்டும் என்பது காலத்தில் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.