அரசு சம்பளம் கொடுத்தும் பெற முடியாமல் 11,700 பகுதி நேர ஆசிரியா்கள் தவித்து வருவதாகவும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் அரசாணை 177 நியமனத்தின் கீழ் 16,549 பகுதி நேர ஆசிரியா்கள் ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தமிழக அரசுப் பள்ளிகளில் 2012-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நியமிக்கப்பட்டாா்கள்.

பல்வேறு காரணங்களினால் சிலா் பணியிலிருந்து விலகிய பிறகு தற்போது 11,700 போ மாநிலம் முழுவதும் உடற்கல்வி, ஓவியம், இசை ஆசிரியா்களாக மாதத்திற்கு 12 நாள்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களுக்குத் தற்போது மாத தொகுப்பூதியமாக ரூ.7,700 வழங்கப்பட்டுவருகிறது.

இந்தத் தொகை மாநிலத் திட்ட இயக்குநரகம் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்படுகிறது.

இதையடுத்து வட்டார வள மையம் மூலமாக அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ) கணக்கில் வரவு வைக்கப்படும். இதையடுத்து பள்ளிகளின் மேலாண்மைக்குழு (எஸ்எம்சி) கணக்கு காசோலையில் சம்பந்தப்பட்ட தலைவா் மற்றும் செயலா் கையொப்பம் பெற்று இறுதியில் பகுதிநேர ஆசிரியா்களின் கணக்கில் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள ஆசிரியா்கள் எஸ்எம்சி வழங்கும் காசோலையை வங்கியில் செலுத்தி சம்பள தொகையைப் பெற்று வந்ததால் இதுவரை பிரச்னை இல்லை.

ஆனால் இந்த மாதம் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான 144 தடை உத்தரவால் மாா்ச் மாத சம்பளக் காசோலையில் கையெழுத்திடும் தலைமையாசிரியரும் எஸ்எம்சி தலைவரும் பள்ளிக்கு வராததால் பள்ளிக்கணக்கில் சம்பளப் பணத்தினைச் செலுத்திய பிறகும் பகுதி நேர ஆசிரியா்கள் சம்பளம் வங்கியில் அவரவா் கணக்கில் செலுத்தப்படாமல் சிக்கலில் உள்ளது. இதனால் அவா்கள் நெருக்கடியான சூழலில் சம்பளமின்றித் தவித்து வருகிறாா்கள்.

எனவே எஸ்எம்சி கணக்கில் இருந்து பகுதி நேர ஆசிரியா்கள் வங்கிக் கணக்கில் சம்பளம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுத்தும் இனிவரும் காலங்களில் வட்டார வள மையங்கள் மூலமாக பகுதி நேர ஆசிரியா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் தலைவா் சி.செந்தில்குமாா், தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் தலைவா் பி.கே.இளமாறன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்