தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த மார்ச் 23-ந் தேதி வெளியிடப்பட்ட மக்கள் நல்வாழ்வுத் துறையின் அரசாணையில், கொரோனா நோய்த்தொற்றைதவிர்க்க அத்தியாவசிய பணிக்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் பணியாற்றிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.இந்நிலையில் அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், அரசாணையில் குறிப்பிடப்பட்ட துறைகளில் மாற்றுத்திறனாளி பணியாளர்களும் பணிபுரியும் நிகழ்வில்அவர்களின் உடல்குறைபாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாட்களில் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நல சங்கங்களின் கோரியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.அந்த கோரிக்கையை ஏற்று மாற்றுத்திறனாளி பணியாளர்கள் பணியில் இருப்பதாக கருதி அனுமதி வழங்கி உரிய ஆணை வழங்க வேண்டும் என்றும் அரசை மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் கோரியுள்ளார்.
அவரது கோரிக்கையை ஏற்று பல்வேறு துறைகளிலும் உள்ள மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் உடல் குறைபாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 14-ந்தேதிவரை அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.