மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஓர் அரசுப்பள்ளி ஆசிரியரின் பணிவான வணக்கம்..

உலக நாடுகளே இன்றைக்கு கொரோனா என்னும் தொற்று நோயினால் உருக்குலைந்து போய் கிடக்கின்ற நேரத்தில்,
அதிலும் குறிப்பாக வல்லரசு நாடுகள் என்று சொல்லப்படக்கூடிய அத்தனை நாடுகளும் அதிர்ந்துபோய், அரண்டுபோய்  கிடக்கின்றன.

அத்தகைய சூழலில் நல்லரசாக நம் இந்திய தேசம் ,அதிலும் குறிப்பாக நம்முடைய தமிழ்நாட்டில், நமது மக்கள் எல்லாம் இன்றைக்கு கொரோனா குறித்த அச்சம் இருந்தாலும் பாதுகாப்பு உணர்வோடு இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் உங்களுடைய
சிறந்த திட்டமிடலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், சுகாதாரத்துறையின் சிறப்பான நடவடிக்கைகளும்தான் என்பதை மறுக்க முடியாது.இதனை எதிர்க்கட்சி அல்ல, எந்தக் கட்சியும் மறுக்க முடியாது.

கொரோனா குறித்த அச்சம் நீடித்து வந்தாலும்கூட, தங்களுடைய சீர்மிகு நடவடிக்கைகளினால் இந்தத் தமிழகம் மீண்டும் தழைத்தோங்கும் என்பதில் சிறிதும் அச்சம் இல்லை.
இந்த கொடிய நேரத்திலும் ஒரு நல்ல விஷயத்தை நான் யோசித்து பார்க்கின்றேன்.
அது தொடர்பாகவே இந்த கடிதத்தைத்  தங்களுக்கு அனுப்புகிறேன்.

கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற பேரச்சத்தின் காரணமாக பள்ளிகள்,கல்லூரிகள் அலுவலகங்கள் என அனைத்தும் விடுமுறை விடப்பட்ட சூழ்நிலையில்
மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அது இயல்பான நடவடிக்கைதான் என்றாலும் கூட, பல்லாயிரம் கோடி வருமானம் என்றாலும், அதனை அடைத்து, மக்களின் உயிர்தான் தமிழக அரசிற்கும், உங்களுக்கும் முக்கியம் என்பதை நிரூபித்து உள்ளீர்கள்.

மதுபானக் கடைகளை பூட்டி இத்தனை நாளான சூழ்நிலையில் 
எவரும் மதுபானம் குடிக்காமல் உயிர்நீத்து விடவில்லை.
அத்தியாவசியப் பொருள்களின் படியலிலோ, அத்தியாவசியக் கடைகளின் பட்டியலிலோ அதன்பெயர் அறவே இடம் பெறவில்லை.


இதன் காரணமாக
குடிகாரர்கள் தொல்லை இல்லை. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நாளிலிருந்து, 
சட்டம்_ஒழுங்கு பிரச்சினை இல்லை.
எந்த வீட்டிலும் குடிகாரக் கணவர்களிடம் மனைவியோ, தந்தையிடம் பிள்ளைகளோ அடி,உதை வாங்கவில்லை.

நம் தமிழ்நாட்டில் இன்றைக்கு நோய் அச்சம் இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்கிறது நம் தமிழ்நாடு.
அதற்கு மிகமுக்கியக் காரணம் 
மதுபான கடைகளின் அடைப்பு.

மாண்புமிகு முதல்வரிடத்தில் எனக்கு ஒரே ஒரு கோரிக்கை தான்.
இதனை தனியொரு மனிதனது கோரிக்கை என்று எண்ணிவிட வேண்டாம்.
ஒட்டுமொத்த 
நடுத்தர மக்களின் கோரிக்கையாகக் கருதி முடிவெடுக்க வேண்டுகிறேன்.

கொரோனா அச்சத்திலிருந்து நம் தமிழகம் மீண்டு நிச்சயமாக நல்லதொரு வாழ்வை,
நல்லதொரு வளர்ச்சியை மீண்டும் உங்களது தலைமையின்கீழ் நம் தமிழகம் அடையத்தான் போகிறது.

மீண்டும் பழையபடி பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட, அனைத்து அரசு அலுவலகங்களும்
செயல்படத்தான் போகின்றன.ஆனால்

தயவுசெய்து, தயவுசெய்து டாஸ்மாக் கடைகள் மட்டும் நமக்கு வேண்டாம்.

இதனை மட்டும் தாங்கள் செய்தால்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் அடையாத நற்பெயரை,
புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் அடையாத நற்பெயரை,
தமிழ்நாட்டில் வாழும் தமிழ்மக்கள் மட்டுமல்ல, உலகத்தில் வாழ்கின்ற அத்தனை தமிழர்களும் உங்களுக்கு வழங்குவார்கள் என்பது உறுதி.

ஓர் மனிதனின் இறப்பில் ஓராயிரம் கோடி வருமானம் என்றாலும் அது நமக்கு வேண்டாம்.

மக்களின் நல்வாழ்விற்காக மதுக்கடைகளை மூடிய முதல்வர் யார்? என்று கேட்டால்,
அவர் எடப்பாடி கே பழனிசாமி என்று தமிழகம் என்றும் நன்றியோடு நினைத்துப் பார்க்கும்.

எவரும் நினைத்து பார்க்காத நேரத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, விவசாயிகளின் தாயாகக் காட்சியளித்த நீங்கள்,

மதுவில்லா தமிழகம் என்னும் மாபெரும் புரட்சியையும் ஏற்படுத்தி,
தமிழ்நாட்டின் தந்தையாகவும் திகழவேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த மடலைப் பணிவுடன் தங்களுக்கு எழுதுகின்றேன் 
நன்றி..வணக்கம் .

பணிவுடன்
சி.சதிஷ்குமார்
ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
மேற்பனைக்காடு
அறந்தாங்கி ஒன்றியம்
புதுக்கோட்டை மாவட்டம்
9994119002