ஜுன் 1 முதல் நடைபெறவுள்ள 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அனைத்தும் மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே நடைபெறும் என்பதை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உடன்
தெரிவித்திட வேண்டும் எனவும்
அரசு, உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும் ( தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ) பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த மாவட்டத்திற்கு 21.05.2020 - ற்குள் வந்து இருக்க வேண்டும் எனவும் அண்மையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவைசார்ந்த விவரங்களைச் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொண்டு வராத ஆசிரியர்கள் பற்றிய விவரங்களைச் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் 21.05.2020 காலை
11 மணிக்குள் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் தற்போது தாம் பயிலும் மாவட்டத்தில் இருப்பதை முதலில் சார்ந்த தலைமை ஆசிரியர் அடங்கிய பள்ளி தொடங்கியிருக்கும் குழு வாயிலாக உறுதி செய்திட வேண்டுமென்றும், அவ்வாறு இல்லாமல் பிற மாவட்டங்கள் அல்லது பிற மாநிலங்களில் தற்போது அவர்கள் தங்கியிருப்பின் அதன் விவரங்களை இன்று ( 16.05.2020 ) மாலை 5 மணிக்குள் தெரிவிப்பதோடு, அவர்களுக்கு tn e-pass வழங்கிட ஏதுவாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்து அதன் விவரத்தையும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, தகுதியுள்ள அனைத்துப் பள்ளிகளும் தேர்வு மையங்களாகச் செயல்படும் எனவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து ஓர் அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. மேலும், தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும் என்று கூறுவதும் பெற்றோரிடையே வரவேற்பையும் மாணவரிடையே நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சொந்த இடங்களுக்கோ, வேறு பாதுகாப்பான இடங்களுக்கோ சென்று தங்கிவிட்ட பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியரை மீளவும் தொலைதூரத்தில் இருக்கும் அவர்கள் பயின்ற பள்ளிகளுக்கு மின் அனுமதி வழங்கி வரவழைப்பது என்பது கொரோனா கால பீதியில் தேவையற்ற ஒன்று. மாணவர்களையும் பெற்றோர்களையும் வீணாக அலைக்கழிக்காமல் விருப்பம் தெரிவிப்போரை, தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களில் மாணவர் அடையாள அட்டை மற்றும் ஆளறித் தேர்வுச்சீட்டு ஆகியவற்றைச் சமர்பித்து அனைத்துத் தேர்வையும் எழுதிட அவசர அவசியம் கருதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்பாணையில் திருத்தம் மேற்கொண்டு மாணவர் மற்றும் பெற்றோர் நலன் காக்கப்படுவது இன்றியமையாத ஒன்றாகும். பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான விடுபட்ட தேர்வு மற்றும் ஊரடங்கு அச்சத்தில் எழுதவிட்ட தேர்வு ஆகியவற்றிற்கும் இந்நடைமுறையை விரிவுப்படுத்திக் கொள்ளுதல் நல்லது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலனில் பெரும் அக்கறை கொண்டு விளங்கும் தமிழக அரசு இதுகுறித்தும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!