71-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் சமயத்தில் நமது கல்வி முறை எத்தகைய‌ மாற்றங்களை அடைந்திருக்கின்றன என்பதை தெரிந்துகொள்வோம்.

1947-ல் சுதந்திரம் அடைந்த சமயத்தில், நமது நாட்டில் கல்வி பெற்றவர்கள் சதவிகிதம் வெறும் 26 தான். இதனையடுத்து விடுதலைப் போராட்ட வீரர்களாக இருந்த அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் மெளலானா அப்துல் கலாம் ஆசாத்தும், சென்னை மாகாணமாக இருந்த தமிழகத்தின் அமைச்சர் அவினாசி லிங்கமும் கல்வி வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டியதாகக் கல்வித்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். 1948-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் மெக்காலே பாடத்திட்டம் மாற்றப்பட்டு முதல் தேசிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.

இதனையடுத்து படிப்பறிவு சதவீதத்தை உயர்த்தியே ஆக வேண்டும் என்ற கட்டாய சூழலில் அதிகமான பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால், போதிய பயிற்சி ஆசிரியர்கள் இல்லாததால், படித்தவர்கள் அனைவருமே கற்பிக்கும் பணிக்கு வந்தனர் என்கிறார் அந்த சமயத்தில் ஆசிரியராக இருந்த மூத்த கல்வி ஆர்வலர்கள் இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காலம் மாறி, தற்போது கல்வி பெற்றவர்களின் சதவீதம் 76 ஆக‌ உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அப்போதே திட்டமிடப்பட்ட கல்வி முறை தான் காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள். சிறந்த பாடத்திட்ட அடிப்படையில் கல்வி பயின்ற நாம், தற்கால சூழலுக்கு ஏற்ற பாடத்திட்ட மாற்றங்களோடு வருங்கால சவால்களை எதிர்கொள்ள தயராக வேண்டியுள்ளது