நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சிலிங் விதிப்படி, எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான‌ கலந்தாய்வை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர்களை தேர்வு செய்ய ஓராண்டுக்கு மட்டும் தமிழக அரசு விதிவிலக்கு அளிக்கும் அவசர சட்டம் இயற்றப்பட்டால் அதை மத்திய அரசு பரிசீலிக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு பெறுவதற்காக, தமிழக அரசு இயற்றிய அவசர சட்ட மசோதாவை‌ நேற்று முன் தினம் சுகாதா‌ரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய உள்துறை அமைச்சகத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த மசோதாவுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளன.