சென்னை: புதன்கிழமை முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. செப்டம்பர் 5-ம் தேதி வரை அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமல்ல உயர்நீதிமன்றம் முன்னர் கூறியிருந்தது. அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமல்ல என்ற உத்தரவுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது. அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை, அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மோட்டார் வாகன சட்டப் பிரிவு 139-ன் படி ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும் போது, தங்களுடைய அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. மேலும் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. செப்டம்பர் 5-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது புதன்கிழமை முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.