தமிழக அரசின் நிதி வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அரசின் பணியிடங்களை தனியாருக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலை கிடைக்கும் என பதிவு செய்துள்ள சுமார் 80 லட்சம் பேர் கதி கேள்விக்குறியாகி உள்ளது.


தமிழக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.சண்முகம் நேற்று முன்தினம் ஒரு அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘அரசின் வருவாயை பெருக்குவதற்காக பல்வேறு அரசு துறைகளில் உள்ள தேவையற்ற பணியிடங்களை குறைக்க, அரசு பணியிடங்களை தனியாருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்கலாம் என்ற பரிந்துரையை அரசு பரிசீலித்தது.

 அதன்படி அரசு ஊழியர் சீரமைப்பு குழுவை அமைக்க அரசு முடிவு செய்து, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் முன்னாள் முதன்மை செயலாளருமான எஸ்.ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் நிதித்துறையின் செயலாளர் (செலவீனம்) எம்.ஏ.சித்திக் உறுப்பினராக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தனது அறிக்கையை 6 மாதத்தில் அரசிடம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:  தமிழக அரசு பணியிடங்களில், அத்தியாவசியமற்ற பணியிடங்களை அடையாளம் கண்டு அந்த பணிகளை தனியாருக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 அதன்படி தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கினால் குறைவான சம்பளம் வழங்க முடியும். அதே நேரம் தற்போது பணியில் உள்ள எந்த அரசு ஊழியர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட மாட்டார்கள். ஆனால், தனியாருக்கு வழங்கப்பட்டால் அந்த துறையில் உள்ள சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் வேறு துறைக்கு அனுப்பப்படுவார்கள்.

எந்தெந்த பணியிடங்களை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கலாம் என்று இந்த குழு அரசுக்கு பரிந்துரைக்கும். இப்படி தனியாருக்கு வழங்குவதன் மூலம் கூடுதல் சம்பளம், ஓய்வூதியம், ஓய்வூதிய பலன்கள் வழங்காமல் இருக்கலாம். தற்போது 10 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இதில் செக்‌ஷன் அதிகாரிக்கு கீழ் உள்ள ஊழியர் பணியிடங்கள் மட்டுமே தனியாருக்கு வழங்கப்படும்.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும். ஆனாலும், அரசுக்கு வேறு வழியில்லை. தமிழக அரசு ஊழியர்களுக்கு இதுவரை ரூ.67 ஆயிரம் கோடி ஊதியமாக வழங்கப்பட்டது. சமீபத்தில் 7வது ஊதியக்குழு பரிந்துரை நிறைவேற்றப்பட்ட பிறகு சம்பளமாக மட்டும் ரூ.88 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இது தமிழக அரசின் மொத்த வருவாயில் 50 சதவீதம் சம்பளத்துக்கே செலவு செய்யும் நிலை உள்ளது என்றார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலைக்காக கடந்த 31-1-2018ம் தேதி வரை சுமார் 80 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

அதன்படி, 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 20,69,337 பேரும், 18 முதல் 23 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 17,09,845 பேரும், 24 முதல் 35 வயது வரை உள்ள அரசு பணி வேண்டிய காத்திருக்கும் வேலை தேடுபவர்கள் 30,466,19 பேரும், 36 வயது முதல் 56 வயது வரை உள்ளவர்கள் 11,468,98 பேர்களும், 57 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 5,730 பேர் மொத்தம் 79 லட்சத்து 78 ஆயிரத்து 429 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து இன்னும் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், இனி அரசு வேலைவாய்ப்புகளை குறைக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது, இவர்களின் அரசு வேலைவாய்ப்புக்கு கேள்விக்குறியாக அமைந்துள்ளது. அதேநேரம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் பணிகளில் தற்போது 10 லட்சம் பேர் உள்ளதாகவும், 2.5 லட்சம் பணியிடங்கள் இன்னும் காலியாக உள்ளதாகவும் அரசு சங்கங்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.

பணியாளர் நிர்வாக சீரமைப்புக் குழுவை உடனே கலையுங்கள்: தமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் கூறும்போது, “தமிழக அரசால் பணியாளர் நிர்வாக சீரமைப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அரசு பணியில் காலியாக உள்ள 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதால் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஊழியர்களை நியமிக்கும் திட்டத்தை அரசு அறவே ரத்து செய்வதுடன், பணியாளர் நிர்வாக சீரமைப்பு குழுைவ உடனடியாக கலைத்து உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமை சங்கத்தின் மாநில தலைவர் பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு அமைத்து அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 7வது ஊதிய குழுவில், அரசு துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஊதிய முரண்பாடு உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். அதேநேரம், ஒப்பந்த அடிப்படையில் அரசு ஊர்தி ஓட்டுனர்கள் பணியிடங்களை நிரப்ப அரசுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட குழுவை உடனடியாக கலைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.