
மொழிப்பாடங்களை ஒரே தாளாக ஒருங்கிணைத்தால் மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதோடு அவர்களது படைப்பாற்றல் திறன் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே, இது தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் வலியுறுத்தினார்.
"மேல்நிலை வகுப்புகளில் ஒருங்கிணைந்த தமிழ்த் தேர்வு' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் பேசியது:-
மாணவர்கள் முழுமையான மொழித்திறன் பெறுவதற்கும் இலக்கிய அறிவு வாயிலாகப் பண்பாட்டு அறிவோடு ஆளுமை வளர்ச்சி பெறுவதற்கும் மொழிப்பாடங்களில் இருதாள்கள் இருப்பது அவசியம்.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மொழிப்பாடங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் மாணவர்களின் மன அழுத்தம் குறையும், வினாத்தாள்களுக்கான செலவு மிச்சப்படும், பள்ளிகளுக்கு கூடுதல் வேலை நாள்கள் உருவாகும் போன்ற காரணங்கள் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதில் எந்தவொரு கருத்துகளும் ஏற்கக் கூடியவை அல்ல. பாடச்சுமையைக் குறைக்காமல் மாணவர்களின் மனச்சுமையை எப்படிக் குறைக்க முடியும். மாறாக இலக்கணம், உரைநடை, செய்யுள், கட்டுரை என அனைத்தையும் ஒரே தாளில் திணிப்பதன் மூலம் மன அழுத்தம் அதிகரிக்கவே செய்யும்.
தமிழை உச்சரிக்கவும், எழுதுவதற்கும் ஏற்கெனவே மாணவர்கள் தடுமாறி வருகின்றனர். இந்தநிலையில் இந்த அரசாணையை செயல்படுத்தினால் மேல்நிலை வகுப்புகளில் மொழிப்பாடத்தின் மீதுள்ள ஆர்வம் மாணவர்களுக்கு மேலும் குறையும். மொழித்திறன், படைப்பாற்றல், சிந்தனை வளம் ஆகிய மூன்றையும் மாணவர்களிடையே வளர்க்க மொழிப்பாடத்தில் கண்டிப்பாக இரு தாள்கள் இருக்க வேண்டும். எனவே இது தொடர்பாக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் இரா.சம்பத்குமார்: கடந்த 30 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவுகளால் ஏற்பட்ட தற்கொலைகளில் ஒரு மரணம் கூட மொழிப்பாடங்களால் நிகழவில்லை. இதுவரை எந்தவொரு மாணவரும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்கள் தங்களுக்கு சுமையாக இருந்தது, மன அழுத்தத்தை கொடுத்தது எனக் கூறியதில்லை.
இந்த அரசாணையை செயல்படுத்தினால் சிறுகதை, கதை மாந்தர் திறனாய்வு, கதையை நாடகமாக்குதல், குறிப்பைக் கொண்டு கதை எழுதுதல், பழமொழிக்கு ஏற்ப ஒரு சம்பவத்தை சொந்தமாக அமைத்தல், தலைப்புக்கேற்ற கவிதை, மொழிபெயர்ப்பு போன்ற மொழிப்பாடத் திறன் வெகுவாக பாதிக்கப்படும். இதனால் எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் உருவாக்கப்படுவார்களா என்பதே கேள்விக்குறியதாகி விடும். கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழ் இரண்டாம் தாளை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டபோது மாபெரும் எழுச்சியால் அந்த ஆணை திரும்பப்பெறப்பட்டதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் சார்பில் இந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அமைப்பின் ஆற்றுநர் பி.இரத்தினசபாபதி, இயக்குநர் கோ.பெரியண்ணன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தலைநகர் தமிழ்ச் சங்க அறக்கட்டளையின் தலைவர் ம.கணபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..