மு.சிவகுருநாதன்
காவிரி டெல்டா மாவட்டங்களை ‘கஜா’ புயல் புரட்டிப் போட்டுள்ளது.
இம்மாவட்டங்களின் நிலக்காட்சியே (landscape) மாற்றம் கண்டுள்ளது. கணக்கிட முடியாத, கற்பனைக்கெட்டாத வகையில் சேதம் விளைந்துள்ளது. இதை வெளியுலகம் மிகத் தாமதமாக அறிந்து தற்போதுதான் நிவாரணப் பொருள்கள் அங்கு விரைகின்றன. அரசின் உதவிகளைவிட தனிநபர் மற்றும் தனியார் அமைப்புகள் அளிக்கும் உதவிகளே அதிகம். இறந்த 46 பேருக்கு மட்டுமே (அரசின் கணக்குப்படி) நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் மற்றும் வீட்டிற்கான இழப்பீடு அவர்களுக்குச் சென்று சேர ஒரு மாதமாவது ஆகும். புயல் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் அரசின் கடைக்கண் பார்வை படாத இடங்களும் உண்டு. காவிரி கடைமடைக்கு தண்ணீர் வர 100 நாள்கள் ஆகும் என்று அமைச்சர்களே சொல்லிவிட்டபிறகு மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் மட்டும் ஒரு வாரத்தில் எட்டுமா என்ன?
‘கஜா’ புயல் வறியோர், வசதி படைத்தோர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் லாரியில் தங்களது குடும்பத்திற்குத் தண்ணீர் பிடிக்கத் தெருவில் காலிக் குடங்களுடன் ஓடும் பெண்களின் நிலை, அவர்களுக்குத் துணையாக ஓடிவரும் சிறுவர், சிறுமியர் என பலதரப்பினரின் நிலையும் மிக மோசமாக உள்ளது. மின்சாரமின்றி தவிக்கும், பாம்புகள், பூரான்கள் போன்ற நச்சு விலங்குகளுடன் உழலும் மக்கள் என சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் பாதிப்புகளிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களில் குழந்தைகள் பாடு அலங்கோலம்.
கூரை, ஓட்டுவீடுகளில் வசிக்கும் குழந்தைகளின் பாடநூல் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வுகளை எதிர்நோக்கியிருந்த அவர்களை இந்தப் புயல் நிலை குலைய வைத்துவிட்டது. இந்தக் குடும்பங்களில் பெரியவர்களின் மதிப்புமிக்க பொருள்கள் புயலால் சூறையாடப்பட்டது என்றால் இக்குழந்தைகளின் விலைமதிக்க முடியாத எளிய சேகரிப்புகள், நினைவுகள் புயலால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகள் கடும் உளவியல் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
வீடு மற்றும் வீட்டிலுள்ள பொருள்கள் அனைத்தையும் இழந்து இன்று வீதியில் பிறரிடம் கையேந்தும் நிலையில் பெற்றோர்கள் இருக்கும் நிலையில் அதனால் குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ள உளவியல் பாதிப்புகளை சொற்களால் விவரிக்க இயலாது. அரசு பள்ளிகளை உடன் திறப்பதன் வாயிலாக இயல்பு வாழ்க்கைத் திரும்பிவிட்டது என்கிற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. (திருவாரூர் கல்வி மாவட்டத்திலுள்ள 5 ஒன்றியங்களிலுள்ள பள்ளிகளை 23.11.2018 அன்று கோட்டும் மழையில் திறந்து குழந்தைகளை பெருத்த அவதிக்குள்ளாக்கியது மாவட்ட நிர்வாகம்.)
சுனாமிப் பேரிடரால் பெற்றோர்களை, அதன் உறுப்பினர்களை இழந்த குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பொதுவாக உயிரிழப்பு ஏற்பட்டால்தான் உளவியல் நெருக்கடி ஏற்படும் என்று நினைப்பது தவறு. புயல் மூலமாக அவர்கள் அடைந்திருக்கும் இழப்புகள், அதிர்ச்சிகள், பயம் ஆகியனவும் அவர்களை உளவியல் சார்ந்த நெருக்கடிக்குள் ஆழ்த்தும் என்பதையும் உணரவேண்டும்.
குழந்தைகளைப் பாதுகாக்க பல்வேறு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். இவற்றை மேற்கொள்வதும் அரசு, பள்ளிகள், ஆசிரியர்கள் என அனைவரையும் செய்யத் தூண்டுவதும் சமூக அக்கறையுள்ளவர்களின் கடமையாகும்.
அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வுகளை ஒத்திவைப்பது தீர்வல்ல; அவற்றை ரத்து செய்யவேண்டும். 1 முதல் 9 வகுப்பு முடிய உள்ள குழந்தைகளுக்கு முதல் மற்றும் மூன்றாம் பருவத்தேர்வுகளைக் கணக்கில் கொண்டால் போதுமானது. 10, +1, +2 ஆகிய வகுப்புகளுக்கு அரையாண்டுத்தேர்வுகள் முடிந்த சில நாள்களிலேயே திருப்புதல் தேர்வுகள் வைப்பது வழக்கம். முதல் திருப்புதல் தேர்வையே அரையாண்டுத்தேர்வாகக் கருதினால் ஒன்றும் குடிமூழ்கிவிடாது.
சுனாமியின்போது செய்ததுபோன்று புயல் பாதித்த பகுதிகளில் 10, +1, +2 ஆகிய வகுப்புகளின் அரசு பொதுத்தேர்வுகளை ஒத்திவைத்து தனியே நடத்த வேண்டும். 10, +1, +2 மாணவர்களுக்குப் புதிய பாட நூல்களும் கல்வி உபகரணங்களும் மீண்டும் வழங்கப்பட்ட வேண்டும். 1 முதல் 9 வகுப்பு இனி மூன்றாம் பருவப் பாடநூல்களையும் கருவிகளை வழங்கினால் போதுமானது. அதுவரையில் உளவியல் ஆலோசனைகள், விளையாட்டு முறைக் கல்வி போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்தலாம்.
உரிய பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கவேண்டும். இதன் மூலம் அவர்கள் இழப்பிலிருந்து மீளவதைக் கண்காணிக்க வேண்டும்.
பள்ளிகளைத் திறந்துதான் ஆகவேண்டும். அதன்மூலம் குழந்தைகள் தங்களது நண்பர்களுடன் மனம் திறந்து பேசுவதன் மூலம் மன உளைச்சல்களுக்கு வடிகால் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் கடுமையான பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், மின்சாரம், போக்குவரத்து ஆகியவற்றை உறுதிசெய்தபின் பள்ளிகளைத் திறப்பது நல்லது.
நிலமற்ற விவசாயக் கூலிகள், தலித்கள், மீனவர்கள் போன்ற விளிம்புநிலை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது அடிப்படைத் தேவைகளையும் வாழ்வாதாரத்தையும் மீட்டுத்தர ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொள்ளவேண்டும். அவற்றுள் குழந்தைகள் நலன் சார்ந்த செயல்களும் அடங்கும்.
வீடுகள் குப்பைக் காடான நிலையில் பள்ளிகளும் அவ்வாறே உள்ளன. இவற்றை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யாமல் குழந்தைகளை அவற்றில் அடைப்பது சரியல்ல.
கதைகள், நாடகங்கள், விளையாட்டுகள் போன்றவற்றின் மூலம் அவர்களது மன அழுத்தத்தைப் போக்கலாம்.
இயற்கைப் பேரிடர்களைப் பற்றி விளக்கமாகவும் தெளிவாகவும் சொல்லித்தரலாம்.
குழந்தைகளிடம் தொடர்ந்து உரையாடி, புயல் அனுபவங்களைப் புனைவாக மாற்றச் செய்யலாம்.
குழந்தைகளிடம் மேற்கொள்ளும் தொடர் உரையாடல் மூலம் அவர்களது தேவைகளை உணர்ந்து அவற்றை வழங்க ஆவன செய்யலாம். மழலைகள், முன் – பின் குமரப்பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்ப அரசு, பள்ளி மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகள் அமையவேண்டும்.
‘கஜா’ புயலால் குழந்தைகளது வாழ்விடம் மட்டுமல்ல; பள்ளிகளும் பெருத்த சேதமடைந்துள்ளன. பள்ளிகளிலுள்ள மரங்கள் அனைத்தும் முறிந்தும் வேரோடு சாய்ந்தும் உள்ளன.
மரங்களை வளர்க்க வேண்டும் என்று பரப்புரை செய்தவர்கள் இன்று அவற்றை வெட்டியகற்றி தங்களது இல்லங்களைப் பாதுகாக்கும் முயற்சியிலிருக்கும் முரண்பாட்டை அவர்களிடம் உணர வைக்கவேண்டும். சூழலியலைப் பாதுகாக்க அதிகமாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூற வேண்டும்.
கடுமையான நோய்த்தொற்றும் அபாயம் இருக்கிறது. இவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள உரிய நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் அவசியம்.

சூழல் மற்றும் அப்பகுதிகளின் சிறப்புத் தன்மைகளுக்கேற்ப குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்த வேண்டும். இதற்கு குழந்தை இலக்கியம் படைப்போர், நல ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள் உரிய வரைவை உருவாக்கலாம். அவற்றைச் செயல்படுத்த அரசுக்குத் தேவையான புற அழுத்தங்கள் அளிக்கவேண்டும். இவைகள் உரிய முறையில் நடைபெறும்போது நாமும் குழந்தைகளும் எந்தப் பேரிடரையும் கடந்துவிடலாம்.
(இக்கட்டுரை 'பஞ்சு மிட்டாய்' இணைய இதழிலும் வெளியாகியுள்ளது. நன்றி 'பஞ்சு மிட்டாய்' பிரபு. ஒளிப்பட நன்றிகள்: 'பாரதி புத்தகாலயம்' சிராஜ் மற்றும் 'பஞ்சு மிட்டாய்' பிரபு.)