டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில் மத்திய அரசு ஊழியர்களை குறிவைத்து மோடி அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அரசு ஊழியர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அரசு நியமித்த குழு ஆலோசனைப்படி நிதியமைச்சகம் வரையறை செய்துள்ளது. மத்திய அரசு பங்களிப்பு 14 சதவிகிதமாக உயர்ந்தால் ஓய்வூதிய தொகையில் 60 சதவிகிதத்தை மொத்தமாக பெற முடியும்.
தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் 2004 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது அதற்கு பின் பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொகையில் மத்திய அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்ஷன் திட்டம் 2004ம் ஆண்டு ஜனவரியில் கொண்டுவரப்பட்டது.
இதன்பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டத்துக்காக அடிப்படை சம்பளத்தில் அதிகபட்சமாக 10 சதவிகிதம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு தொகையை மத்திய அரசு முதலீடு செய்யும். இந்த திட்டத்தில் மத்திய அரசு பங்களிப்பை மேலும் 4 சதவிகிதம் உயர்த்தி 14 சதவிகிதமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், இரு தினங்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தேசிய பென்ஷன் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த திட்டத்துக்கு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதில் மாற்றம் இருக்காது. ஊழியர்களின் பங்களிப்புக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80சியின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு. இந்த திட்டத்தில் அரசு வழங்கும் 10 சதவீத பங்களிப்பை 14 சதவிகிதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுளளது.
இதன்மூலம் ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு கிடைக்கும் பென்ஷன் தொகை வெகுவாக உயரும். தற்போது உள்ள பங்களிப்பின்படி ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வூதிய தொகையில் 40 சதவிகிதத்தை மொத்தமாக பெற முடியும். மத்திய அரசு பங்களிப்பு 14 சதவிகிதமாக உயர்ந்தால் ஓய்வூதிய தொகையில் 60 சதவிகிதத்தை மொத்தமாக பெற முடியும்.
இது அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். இதனால் 36 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பலன் பெறுவார்கள். இதற்காக நிதி மசோதாவில் மாற்றம் செய்யப்படும். இதனால் 60 வயதில் ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியரின் பென்சன் தொகை வெகுவாக அதிகரிக்கும். 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
source: oneindia.com