தமிழக பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வித் துறையில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,
சார்பில்,போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெறுபவர்கள்,தர வரிசையில் இடம் பெறுவர். அவர்களுக்கு, இட ஒதுக்கீட்டு விதிகளின்படி, உரிய நியமனம் வழங்கப்படும்.ஆனால், டி.ஆர்.பி.,யின் தேர்வுகளில், சில ஆண்டுகளாக, முறைகேடுகளும், விதிமீறல்களும் அதிகரித்துள்ளன. எனவே, டி.ஆர்.பி.,யின் பணி நியமனம் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது.குறிப்பாக, அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆகஸ்டில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. தேர்ச்சி பட்டியலில், சிலருக்கு மட்டும் அதிக மதிப்பெண் வழங்கப்பட்டது.இந்த முறைகேட்டை, தேர்வு எழுதியோரே அம்பலப்படுத்தினர். இது குறித்து, டி.ஆர்.பி.,உறுப்பினர் செயலர் உமா அளித்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், டி.ஆர்.பி.,யில் பணியாற்றியவர்கள் உட்பட, எட்டுக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.முறைகேடு காரணமாக, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல, ஆசிரியர்தகுதிக்கான, 'டெட்' நுழைவு தேர்விலும், அதிக மதிப்பெண் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்தும், விசாரணை நடந்து வருகிறது.இதன்பின், டி.ஆர்.பி., நடத்திய, அரசு பள்ளி சிறப்பாசிரியர் தேர்விலும், குளறுபடி ஏற்பட்டது. இதுகுறித்து, உயர் நீதிமன்றத்தில், வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், வழக்குகள் மற்றும் முறைகேடுகளால், டி.ஆர்.பி., யின் மொத்த செயல்பாடுகளும் முடங்கியுள்ளன. நடப்பு ஆண்டில் அறிவிக்கப்பட்ட, எந்த தேர்வையும், டி.ஆர்.பி.,யால் நடத்த முடியவில்லை. இன்னும் ஒரு நாளில், இந்த ஆண்டே முடிய உள்ளது. அதற்குள் அறிவித்த தேர்வுகளை நடத்துவது அறவேசாத்தியமல்ல. டி.ஆர்.பி.,முடங்கியதால், அரசு துறைகளில், 3,030 காலியிடங்கள் நிரப்பப்படாமல், காலியாகவே இருக்கின்றன.இது குறித்து, 'பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோர் ஆலோசனை நடத்தி, டி.ஆர்.பி.,யில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.'அரசியல் தலையீடுகள்மற்றும் முறைகேடுகளுக்கு இடமின்றி, தேர்வுகள் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், டி.ஆர்.பி.,யை கலைத்து விட்டு, டி.என்.பி.எஸ்.சி., வழியாக, பணி நியமனங்கள் செய்யலாம்' என, கல்வியாளர்கள்கருதுகின்றனர்.காலாவதியான தேர்வுகள்!வேளாண் பயிற்றுனர் பதவியில், 25 காலியிடங்களுக்கு, ஜூலையிலும், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,065 விரிவுரையாளர் பணிக்கு, ஆகஸ்டிலும் தேர்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 1,883 இடங்களுக்கு, ஜூனில் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.உதவி தொடக்க கல்வி அதிகாரி பதவியில், 57 இடங்களுக்கு செப்டம்பரிலும், ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வு அக்டோபரிலும் நடத்தப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்தது. இந்த தேர்வுகள் அனைத்தும் நடத்தப்படாமல், அந்த அறிவிப்பு அட்டவணையே காலாவதியாகியுள்ளது.


Whats App Group link