புதுக்கோட்டை,டிச.21: புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்,ஆங்கிலம் எழுத ,வாசிக்கத் தெரியாத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலையினை உருவாக்க வேண்டும் என அரசுதேர்வுத்துறை இணைஇயக்குநர்(பணியாளர்தொகுதி) செ.அமுதவல்லி பேசினார்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அரசு தேர்வுத்துறை இணைஇயக்குநரும்(பணியாளர்தொகுதி), மண்டல ஆய்வு அலுவலருமான செ.அமுதவல்லி தலைமையில் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை வகித்துஅரசு தேர்வுத்துறை இணைஇயக்குநரும்(பணியாளர்தொகுதி) ,மண்டல ஆய்வு அலுவலருமான செ.அமுதவல்லி பேசியதாவது: பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை தினமும் காலை,மதியம் இருவேளைகளிலும் மாணவர்களின் வருகைப்பதிவினை இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்..மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளன்றே மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள்,குறிப்பேடுகள் ,மாணவர்களின் நலத்திட்டங்களை வழங்க வேண்டும்.கல்வித் துறையின் சார்பில் கேட்கப்படும் புள்ளி விபரங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் உடனுக்குடன் வழங்கிட வேண்டும்.மாணவர்களின் நலன் கருதி மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறுந்தகவலில் அனுப்ப தலைமையாசிரியர்களை வட்டாரக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள் தமிழ்,ஆங்கிலம் எழுத ,வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்,கணிதத்தில் அடிப்படை செயல்பாடுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா,இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் கே.அண்ணாமலை ரஞ்சன்,அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு ) கு.திராவிடச் செல்வம்,மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர்கள்,வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் துறை உதவிஇயக்குநர் அலுவலகத்தையும், புதுக்கோட்டை வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யும் அலுவலகத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்..ஆய்வின் போது புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா,மாவட்டக்கல்வி அலுவலர்கள் இலுப்பூர் க.குணசேகரன்,புதுக்கோட்டை கே.அண்ணாமலைரஞ்சன்,அறந்தாங்கி(பொ)கு.திராவிடச்செல்வம், அரசுத்தேர்வுகள் துறை உதவிஇயக்குநர் அ.பிச்சைமுத்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக திருக்கோகர்ணம் அரசினர் மேல்நிலைப்பள்ளி,திருக்கோகர்ணம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.