சென்னை:தமிழக காவல்துறை வரலாற்றில் முதன்முதலாக மாணவர் காவல் படை தொடங்கப்பட்டு உள்ளது. இதை சென்னை காவல் ஆணையர் மற்றும் சென்னை ஆட்சியர் தொடங்கி வைத்தனர்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், மாணவர் காவல் படை என்ற புதிய படையின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறையும், பெருநகர காவல்துறையும் இணைந்து மாணவர்களின் ஒழுக்கத்தை கல்வியுடன் சேர்ந்து மேம்படுத்தி மாணவர்ளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் பொருட்டு இந்த படையானது உருவாக்கப் பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவல் ஆணையர் விஸ்வநாதனுடன் இணைந்து மாணவர் காவல் படையை அறிமுகப் படுத்தினார். பின் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் பேசியதாவது: மாணவர் காவல் படையில் இணைந்துள்ள மாணவர்களுக்கு நாள் தோறும் இந்த பயிற்சியானது ஒரு மணி நேரம் வழங்கப்பட உள்ளது.
நோக்கம் என்ன?
மாணவர்களின் பாலிய பருவங்களில் அவர்கள் கவனம் சிதறி தவறான வழியில் சென்றுவிடாமல் இருக்கவே இந்த அமைப்பு. மேலும், அவர்களின் மனதையும் உடலையும் ஒருமுகப்படுத்தி ஒழுக்கத்துடன் நல்ல வழியில் கொண்டு செல்வதே இந்த படையை உருவாக்கியதன் நோக்கம்.
67 கோடி நிதி
இந்தியா முழுவதும் இந்த திட்டத்திற்காக 67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் இந்த படையை வழிநடத்த தலா ஒரு கோடியே 3 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.
138 பள்ளிகளில் உருவாக்கம்
அவரை தொடர்ந்து காவல் ஆணையர் விஸ்வநாதன் பேசியதாவது: கடந்த ஆண்டு ஹரியானவில் உள்ள குர்கானில் துவக்கப்பட்ட இந்த படையானது இந்த ஆண்டு தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள 138 பள்ளிகளில் இந்த படையானது உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு தேசப்பற்று
மாணவர்களின் தனி ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, தேசப் பற்று ஆகியவற்றை வளர்க்க இந்த படை பேருதவியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் மாணவர் காவல் படையினர் காவல்துறையினருடன் இணைந்து செயல்படுவார்கள்.
போலீசுடன் இணைந்து பணி
சட்டம் ஒழுங்கை, சாலை பாதுகாப்பு போன்றவற்றில் பணியாற்றுவார்கள். அதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் காவல்துறையினர் இருப்பது போன்ற உணர்வினை இது உருவாக்கும் என்று அவர் கூறினார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர்கள் மகேஷ் குமார் அகர்வால், தினகரன், பள்ளி கல்வித்துறை மாவட்ட அலுவலர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Whats App Group link