ஜாக்டோ-ஜியோ நடத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் 25ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.,
ஆசிரியர்களின்ன் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த மாணவர் கோகுல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் நவீன் வாதிடும்போது, அரசுக்கும், ஜாக்டோ- ஜியோவுக்கும் இடையிலான இந்த பிரச்னையில் அப்பாவி மாணவர்கள் பாதிக்க கூடாது. ஆசிரியர்களுக்கு மாணவர்கள் குறித்து கவலையில்லை.  நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற ஆசிரியர்கள் எதுவும் செய்யவில்லை என்று வாதிட்டார்.அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதிடும்போது, ‘‘தொடக்க பள்ளி தவிர்த்து பிற அரசு பள்ளிகளில்  39.7 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. பிரச்னைகளுக்கு தீர்வு காண வேறுவழிகள் உள்ளன. மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நிலைமையை கையாள அரசுக்கு தெரியும்.
நீதிபதி: என்னென்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?
அட்வகேட் ஜெனரல்: ஜாக்டோ-ஜியோ கோரிக்கையை பரிசீலிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய முறை நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
நீதிபதிகள்: தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஊதியம் எவ்வளவு?
அட்வகேட் ஜெனரல்: ரூ.56,000
நீதிபதிகள்: நடுநிலை மற்றும் உயர் நிலை ஆசிரியர்களுக்கு?
அட்வகேட் ஜெனரல்: ரூ.60 ஆயிரம் முதல் ரூ.62,000 வரை.
நீதிபதிகள்: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் எத்தனை பேர் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர். ஆசிரியர்கள் பணித்திறனை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
அட்வகேட் ஜெனரல்: தற்போது புள்ளி விபரங்கள் இல்லை. போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆஜரான வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத்: ஒரே இரவில் நாங்கள் போராட்டத்தில் இறங்கவில்லை. 2017ம் ஆண்டு முதல் கோரிக்கை உள்ளது. 2009ம் ஆண்டில் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. பங்களிப்பு ஓய்வூதிய முறையை நீக்க வேண்டும் என்று கோரினோம். ஆனால், எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.
மதுரை கிளையில் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது தலைமைச் செயலாளர் ஆஜரானார். உயர் நீதிமன்றம் போராட்டத்தை கைவிடச் சொன்னதால் போராட்டம் நிறுத்தப்பட்டது. எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு முன்வரவில்லை.
ஊதிய உயர்வு நிலுவை தொகையை வழங்கவில்லை. ரூ.56 ஆயிரம் சம்பளம் என்பது தவறு. 7வது ஊதியக் குழு பரிந்துரைப்படி 2016ம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இந்த ஜனநாயக போராட்டத்தில் நீதிமன்றம் தலையிட முடியுமா?
அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும் ஆனால் இல்லை. கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவிக்கிறது.
இவ்வாறு வாதம் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் “ ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் ஜனவரி 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் இடைக்காலமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஊழியர்கள் போராடும் அளவிற்கு தமிழக அரசு ஊழியர்களை தள்ளக்கூடாது” என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 29ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.