இலுப்பூர்,ஜன.20 : மாணவர்கள் படிப்பு மற்றும் கலைகளில் தங்களது திறமைகளை பட்டை தீட்டி சிறப்பாக முன்னேற வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசினார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இலுப்பூர் கல்வி மாவட்ட அளவிலான கலைத்திருவிழா இலுப்பூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது..
நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமைதாங்கி கலைத்திருவிழாவினை தொடங்கி வைத்து பேசியதாவது, கலைத்திருவிழா மாணவர்களாகிய உங்களுக்கானது.இத்திருவிழா நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நடத்தப்படுகிறது. எனவே மாணவர்களாகிய நீங்கள் படிப்புடன் கலைகள் உள்ளிட்ட பிற திறமைகளை வெளிப்படுத்த கிடைத்த இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.கலைத்திருவிழாவையடுத்து உங்களுக்கு வரக் கூடியது தேர்வு.எனவே தேர்வுக்கு முன் உங்களை தயார்படுத்தக் கூடிய நிலையில் உங்களை மகிழ்ச்சிபடுத்த ,உங்களது திறமைகளை வெளிப்படுத்த ,உங்களை பாராட்டவே இக்கலைத்திருவிழா.எனவே மாணவர்களாகிய நீங்கள் படிப்பு மற்றும் கலைகளில் உங்களது திறமைகளை பட்டைதீட்டி சிறப்பாக முன்னேற வேண்டும் என்றார்.
விழாவில் பாரத சாரண,சாரணியர் இயக்க இலுப்பூர் கல்வி மாவட்ட தலைவர் இரா.சின்னத்தம்பி கலந்து கொண்டு கலைத்திருவிழாவினை வாழ்த்தி பேசும்போது கூறியதாவது:கலைத்திருவிழாவை நான் இதுவரை பள்ளிகளில் பார்த்தது இல்லை..இன்று தான் பார்க்கிறேன். இங்கு கலைத்திருவிழாவில் கலந்து கொண்டுள்ள மாணவர்களாகிய நீங்கள் படிப்போடு மட்டுமல்லாமல் கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்..நான் பள்ளி சென்று அதிகம் படிக்கவில்லை..அதனால் நான் தினசரி செய்தித்தாள்களில் வரும் செய்திகளை படித்து சமூகத்தில் உள்ள நல்லவர்களை பற்றி தெரிந்து கொள்வேன்.மேலும் நான் சேர்மனாக பதவியேற்று எனது அலுவலகத்தில் அமர்ந்த பொழுது எனக்கு சிறுவயதில் பாடம் எடுத்த எனது ஆசிரியரின் புகைப்படத்தை பார்த்தேன்.உடனே அவரை பார்க்கனும் ,அவரிடம் ஆசிர்வாதம் வாங்கனும் என என்மனம் நினைத்தது..அதன் படியே அவர் இருக்கும் இடம் சென்று அவரிடம் ஆசி வாங்கினேன்.அப்பொழுது நான் உங்களிடம் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திய மாணவன் என்றேன்.உடனே அவர் என்னை கட்டியணைத்துக் கொண்டார்..அவரது ஆசிர்வாதத்தால் தான் இன்று நான் வளர்ந்து கொண்டே இருக்கிறேன்.எனவே மாணவர்களாகிய நீங்களும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும்.நினைக்க வேண்டும்.தாய் தந்தையர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்றார்..மேலும் இந்த பள்ளி கட்டிடத்தை வேற துறையில் இருந்து கல்வித் துறைக்கு கேட்டுப் பெற்று இன்று இந்தப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வதற்கு காரணமாக இருந்தவர் எனது மகன் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தான்.தற்பொழுது நான் இப்பள்ளிக்கு 5 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நன்கொடை கேட்டுள்ளேன்..விரைவில் அப்பணி தொடங்கப்படும்.பள்ளிக்கு என்ன தேவையோ அதை கருத்தில் கொண்டு நான் ஒரு சேவையாகவே அதை செய்வேன்.தற்பொழுது எனக்கு சாரண சாரணியர் இயக்கத் தலைவர் பொறுப்பு கொடுத்துள்ளார்கள்.அப்பதவிக்கு ஏற்றாற் போல் நான் செயல்படுவேன்.என்னால் முடிந்தவரை இப்பள்ளிக்கும்,இப்பகுதி மக்களுக்கும் உதவி செய்வேன்..நான் படிக்கவில்லை என்பதால் என் குழந்தைகளை ரொம்ப கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன்.என்னைப்போல் படிக்காமல் யாரும் இருக்க கூடாது என்பதற்காகவே இன்று பள்ளி வளர்ச்சிக்கு ,மாணவர்களின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன்.நான் சிறுவயதில் இருந்தே கடுமையாக உழைத்தேன்,உண்மையாக நடந்து கொண்டேன்,சேமிப்பு பழக்கத்தை கடைப்பிடித்தேன்,அதனால் உயர்ந்தேன் என்றவர் ஆசிரியர்களாகிய நீங்கள் மாணவர்களை சிற்பமாக செதுக்கி அழகு பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் இலுப்பூர் கல்வி மாவட்ட மாவட்டக் கல்வி அலுவலர் க.குணசேகரன் வரவேற்றுப் பேசினார்.பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குரு.ராஜமன்னார்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவி திட்ட அலுவலர் இரா.இரவிச்சந்திரன்,மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளராக கவரப்பட்டி தலைமையாசிரியர் இரா.சிவக்குமார்,இணை ஒருங்கிணைப்பாளராக இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி ஆகியோர் செயல்பட்டனர்.கலைத் திருவிழாவின் அமைப்பாளராக இலுப்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆ.எழிலரசி,உதவி அமைப்பாளர் அன்னவாசல் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சாந்தகுமாரி செயல்பட்டனர். கலைத் திருவிழா நிர்வாகிகளாக இலுப்பூர் பள்ளி தலைமையாசிரியர் தி.ஜெயராமன், வயலோகம் பள்ளி தலைமையாசிரியர் யோ.ஜெயராஜ்,விராலிமலை பள்ளி தலைமையாசிரியர் ரெ.சுரேஸ்,சடையம்பட்டி தலைமையாசிரியர் சி.குமார்,பெருமாநாடு பள்ளி தலைமையாசிரியர் மாரிமுத்து ஆகியோர் செயல்பட்டனர்.
கலைத்திருவிழாவில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு பிரிவாக பிரிக்கப்பட்டு கும்மி நடனம்,குழு நடனம் ,பேச்சுப்போட்டி,கிராமிய நடனம் ,பரத நாட்டியம் நடத்தப்பட்டது.அதே போல் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு களிமண் சிற்பம் செய்தல்,நாட்டுபுறப்பாடல்,கரகாட்டம்,பரதநாட்டியம்,நாடகம்,பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு களிமண் சிற்பம்,பறை அடித்தல் ,புல்லாங்குழல் வாசித்தல் ,ஒயிலாட்டம்,தேவராட்டம் ,பல குரல் பேச்சு ,வீதி நாடகம் நடத்தப் பட்டது. பின்னர் போட்டியில் முதலிடம் பெற்ற அனைவருக்கும் ஏ தரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.போட்டியின் நடுவர்களாக வட்டாரக் கல்வி அலுவலர்கள்,வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்,உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள்,வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் செயல்பட்டனர்..கலைத்திருவிழாவில் இலுப்பூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..