ஆசிரியர்கள் பணிக்கு வந்ததால், அரசு பள்ளிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

 ஒன்பது நாட்களாக நடத்தப்படாத பாடங்களை, சிறப்பு வகுப்புகள் நடத்தி முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில் நடந்த, வேலைநிறுத்த போராட்டம், பள்ளி கல்வி மற்றும் தொடக்க கல்வியின் கீழுள்ள, அரசு பள்ளிகளை கடுமையாக பாதித்தது.

பொதுத்தேர்வு, மார்ச், 1ல் நெருங்கும் நிலையில், இறுதி கட்ட திருப்புதல் தேர்வுகள், மாதிரி தேர்வுகள் போன்றவை நடத்தப்படவில்லை.
பல பள்ளிகளில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பாடங்கள் நடத்தப்படாமல் உள்ளன.

செய்முறை தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, முறையான பயிற்சியும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு நடவடிக்கைகளால், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள், ஜன., 29 முதல், பணிக்கு திரும்பினர்.

எனவே, 'ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில், ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தி, மாணவர்களுக்கான பாடங்களை முடிக்க வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பள்ளி வேலை நேரம் தவிர, காலை மற்றும் மாலையிலும், சனி, ஞாயிற்று கிழமைகளிலும், ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது