தமிழகத்தில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது என்றார் தமிழக உயர்கல்வித்துறை  அமைச்சர் கே.பி.அன்பழகன்.
தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா  நடைபெற்ற  விழாவில்,  மாணவ, மாணவியருக்கு பட்டமளித்து மேலும் அவர் பேசியது: 

கல்வியில் நீடித்த நிலையான வளர்ச்சியை தமிழகம் பெற்றுள்ளது. 

தமிழக அரசு ரூ.4,584 கோடியை உயர்கல்விக்காக ஒதுக்கியுள்ளது.  ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 65 புதிய கல்லூரிகளையும்,  960 புதிய பாடங்களையும் தோற்றுவித்தார்.

 இதைத் தொடர்ந்து, தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 11 கல்லூரிகளையும் 5 பல்தொழில்நுட்பக் கல்லூரிகளையும்,  635 புதிய பாடங்களையும் தோற்றுவித்துள்ளார்.  இதன் மூலம், அனைவருக்கும் சமமான உயர்கல்வி எனும் இலக்கை தமிழகம் எட்டியுள்ளது.

அகில இந்திய அளவில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 25.8 சதமாக உள்ளது.

 இதில், தமிழகத்தில் மட்டும் மாணவர் சேர்க்கை 48.6 சதமாக உள்ளது.  இந்திய அளவில் வருகிற 2020-ஆம் ஆண்டுக்குள் 30 சதமாக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஆனால், தமிழகத்தில் மாணவர் சேர்க்கையானது 2017-18-ஆம் ஆண்டில் 48.6 சதமாக  உள்ளது.

 பள்ளிக் கல்விக்கும்,  உயர்கல்விக்கும் அதிக நிதி ஒதுக்கி பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவதால்,  தமிழகம் உயர்கல்வியில் இத்தகைய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்றார்.