தமிழகத்தில் சமீபத்தில் வீசிய கஜாப்புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் மொய்விருந்து நடத்தப்பட்டு, இங்குள்ள கிராமங்களுக்கு உதவிட திட்டமிடப்பட்டது ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். அதன் முதற்கட்ட பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் எல்.என்.புரம் ஊராட்சியில் கடந்த ஒரு மாத காலமாக 100 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களின் வீழ்ந்துகிடந்த மரங்களை அகற்றியதோடு, அவர்களது நிலங்களையும் சுத்தம் செய்ய உதவியதோடு தென்னங்கன்றுகளையும் வழங்கி உதவியது தமிழ்நாடு அறக்கட்டளை.
இப்பணிகளை நேரடியாகப் பார்வையிட்டு பயனாளிகளைச் சந்தித்து உரையாடியதோடு , அடுத்த கட்டப்பணிகள் குறித்தும் கேட்டறிந்து சென்றுள்ளார் அமெரிக்க தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் சோமாலயா சோமசுந்தரம்.
அவர் வந்து சென்ற பிறகு தற்பொழுது எல்.என்.புரம் பகுதியில் சூரிய ஒளி மூலம் இயங்கும் சோலார் தெருவிளக்குகளும் அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. முதற்கட்டமாக இப்பணிகளை முன்னெடுத்துச் செய்துள்ள தமிழ்நாடு அறக்கட்டளை அமைப்பிற்கு இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும், பொதுமக்களும் நன்றியைத் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் உள்ள டாலஸ் தமிழ் மக்கள் மற்றும் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த வாகை பெண்கள் குழு மூலமாக பெறப்பட்ட நிதியை இப்பகுதிக்கு பெற்றுத்தர உதவிய ஆசிரியர் சதிஷ்குமாரிடம் இதுகுறித்து கேட்டபொழுது, பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் கடல்கடந்து இருக்கும் அமெரிக்க வாழ் நம் தமிழ் சொந்தங்கள் செய்த இந்த உதவி என்றென்றும் வரலாற்றில் இடமல்ல, தடம் பதித்து நிற்கும். ஏனெனில் அருகில் உள்ளவர்களெல்லாம் உதவி செய்ய யோசித்து கொண்டிருந்தபொழுது, உதவி எனக் கேட்டவுடன், உடனே கரம் தந்த அமெரிக்க தமிழ் சொந்தங்கள் வணக்கத்திற்குரியவர்கள்.அதிலும் இங்கு நடைபெறும் பணிகளை ஒருங்கிணைத்து உதவி செய்து வரும் தமிழ்நாடு அறக்கட்டளையின் பங்களிப்பு என்பது மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும். கஜா நிவாரணப்பணிகளில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அறக்கட்டளையிடம் உதவி எனக் கேட்டவுடன் உடனே   தொடங்கிய அவர்களது பங்களிப்பு, தற்பொழுது மறுசீரமைப்பு வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்பது நன்றிக்குரியதாகும். மேலும் இப்பணிகளில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு ஒத்துழைப்பு நல்கிவரும் உள்ளூர் இளைஞர்களின் பங்கேற்பும் பாராட்டுக்குரியது எனத் தெரிவித்தார்.


Join Whats App Group Link -Click Here