தேனி: தாயும், மகளும் ஒரே பயிற்சி மையத்தில் பயின்று ஒன்றாக தேர்வு எழுதி.. அரசுப்பணியில் சேர்ந்துள்ள சுவாரஸ்ய நிகழ்வு சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றது.


தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். அவரின் மனைவி சாந்திலட்சுமி. அவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2014ம் ஆண்டு ராமச்சந்திரன் காலமானார்.

இந்நிலையில், சாந்தி லட்சுமி, தனது மூத்த மகள் தேன்மொழி உடன் சேர்ந்து அரசுப்பணித் தேர்வு பயிற்சி வகுப்புக்கு செல்ல முடிவு செய்தார். ஆசிரியர் ஒருவரின் இலவச பயிற்சி வகுப்பில் தாய் சாந்தி லட்சுமியும், மகள் தேன் மொழியும் சேர்ந்து ஒன்றாக படித்தனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு

சமீபத்தில் தமிழக அரசுப்பணி தேர்வானயத்தின் மூலம் குரூப் 4 பிரிவுக்கான தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வுக்கு வயது தடையில்லை. 10ம் வகுப்பு கல்வித்தகுதி இருந்தால் போதுமானது.

தேர்வு எழுதினர்

எனவே, தேர்வில் சாந்திலட்சுமியும், தேன்மொழியும் பங்கேற்று எழுதினார்கள். ஆனால், ஆச்சரியம் அளிக்கும் வகையில், இருவரும் தேர்ச்சி பெற்று அரசுப்பணி பெற்றனர். தாயும், மகளும் ஒரேநேரத்தில் தேர்வு எழுதி அரசுப்பணி கிடைத்ததால், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பணியிடம்

சுகாதாரத்துறையில் சாந்தி லட்சுமிக்கு பணியிடமும், இந்து அறநிலையத் துறையில் தேன்மொழிக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாந்தி லட்சுமி கூறியதாவது:எனது கணவர் இறந்தபின் வீட்டில் தனியாக இருந்தேன்.

வயது இல்லை

என் மகள் அரசுத் தேர்வு பயிற்சி வகுப்புக்குச் செல்வதை பார்த்து நானும் சென்று படித்தேன். சமீபத்தில் தமிழ்நாடு அரசின் குரூப் 4 தேர்வுக்கு வயது தடையில்லை, 10ம் வகுப்பு தகுதியிருந்தால் போதும் என்று பயிற்சி வகுப்பு ஆசிரியர் தெரிவித்தார்.

வேலை கிடைத்தது மகிழ்ச்சி

இதை ஏற்று நானும், மகளும் பயிற்சிவகுப்பில் பங்கேற்று, தேர்வு எழுதினோம். எங்கள் இருவருக்கும் வேலைகிடைத்துவிட்டது. எனக்கு சுகாதாரத்துறையில் கிடைத்துள்ளது.

மகளுக்கு பணி

தேனி மாவட்டத்தில் பணியிடம் ஒதுக்கப்படும் என நம்புகிறேன். என் மகளுக்கு இந்து அறநிலையத் துறையில் பணி கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்