அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வரும் மே 31-இல் ஓய்வு பெறுவதன் மூலம் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து, இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 5,500-க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மே மாதத்தில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். தற்போது 5,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளன. இதனால் கலந்தாய்வு நடத்தினாலும் ஆசிரியர்களுக்குப் பயனளிப்பதில்லை. கல்வியாண்டின் இடையே, ஓய்வு வழங்கப்படுவதில்லை என்பதால் மே 31-இல் 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். நடப்புக் கல்வியாண்டில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஜூன் மாதத்துக்குப் பின்னரே கலந்தாய்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் கலந்தாய்வில் ஆகஸ்ட் மாத மாணவர், ஆசிரியர் விவரத்தை அடிப்படையாகக் கொண்டே, இடமாறுதல் வழங்கப்படுகிறது. இதனால் சில ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு பயனளிக்கவில்லை. இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:
ஆண்டுதோறும் எங்களுக்கான இடமாறுதல் கோடை விடுமுறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு முன்கூட்டியே விவரம் சேகரிக்கப்படும். நிகழ் கல்வியாண்டில், மே மாதத்தில் கலந்தாய்வு நடத்த வாய்ப்பில்லை.
இதனால், மே 31-இல் ஓய்வு பெறப்போகும் ஆசிரியர் பணியிடங்களை காலிப் பணியிடங்களாகக் கருதி கலந்தாய்வில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் கலந்தாய்வு பயனளிக்காது எனத் தெரிவித்தனர்.


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here