எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை வெள்ளிக்கிழமை தொடங்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,000 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதனிடையே, கரூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்கள் கிடைத்துள்ளன.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நிகழாண்டில் கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள் தமிழக கல்லூரிகளுக்கு கிடைத்துள்ளன. அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது என்றார்.
"மாணவிகளின் தற்கொலை வேதனையளிக்கிறது': எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் புதன்கிழமை வெளியான நிலையில், அதில் தோல்வியடைந்த இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்வு நேரத்தில் மன அழுத்தத்துக்கு ஆளாகி தவறான முடிவுகளை மாணவர்கள் எடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் 104 உதவி மையத்தின் கீழ் உளவியல் ஆலோசனைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. நீட் மட்டுமன்றி, எந்தத் தேர்வாக இருந்தாலும் தோல்விகளைக் கண்டு மாணவர்கள் சோர்வடையக் கூடாது. எதையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளக் கூடிய மனோதிடத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு முடிவுக்குப் பிறகு இரு மாணவிகள் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றன என்றார் அவர்.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here