பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் உள்பட தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 45 கலந்தாய்வு உதவி மையங்களில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூன் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், ஜூன் 20-ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கும், ஜூன் 21-இல் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், ஜூன் 22-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்குமான கலந்தாய்வு சென்னையில் மட்டும் நடத்தப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து ஜூன் 25 முதல் 28-ஆம் தேதி வரை பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட 
உள்ளது.
பின்னர் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. 
இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் கடந்த 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வியாழக்கிழமை தொடங்க இருந்தது. ஆனால், புதன்கிழமை ரமலான் பண்டிகை காரணமாக, ஒரு நாள் தாமதமாக, சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் உள்ள 45 கலந்தாய்வு உதவி மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் பதிவிறக்கம் செய்த ஆன்-லைன் விண்ணப்பத்துடன் அனைத்து அசல் மற்றும் நகல் கல்விச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றுடன் இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க 
வேண்டும்.
இந்த சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, கலந்தாய்வில் பங்கேற்க தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here