ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியானது குறித்து சென்னை அடையாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில், ‘ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியாகி இருக்கிறது. இன்னும் 10 நாட்களுக்குள் அவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். தேதியை அறிவித்த உடன் எங்கு காலி பணியிடங்கள் இருக்கிறதோ? அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும். ஆன்-லைன் முறையில் நடைபெற்று முடிந்த தேர்வில் ஒரு சிறு தவறு கூட நடக்கவில்லை.

அதேபோல் கலந்தாய்வும் வெளிப்படைத்தன்மையோடு நடைபெறும். இதற்கான பணிகளை துரிதப்படுத்தவும், மிகவிரைவிலேயே பணி நியமன ஆணை வழங்குவதற்கும் தனி ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்’ என்றார்.