தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய நிறுவனச்சட்டம் 2019-ன் படி, பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அவற்றின் லாபத்தில் இரண்டு சதவீத தொகையை சமூக பொறுப்பு செயல்பாடுகளில் பயன்படுத்த வேண்டும்.

பெரும்பாலான நிறுவனங்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடனோ, நேரடியாகவோ பள்ளிகளை தேர்ந்தெடுத்து, அங்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி உதவி செய்கின்றன. இதேபோல் முன்னாள் மாணவர்கள் பலரும் தாங்கள் படித்த அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு உதவி செய்யும் ஆர்வத்துடன் உள்ளனர்.

இத்தகைய நிறுவனங்களுக்கும், ஆர்வலர்களுக்கும் உதவிடும் வகையில் எளிமையான, நம்பகமான இணையதளமோ அல்லது வேறு வழித் தடங்களோ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.

இதனால் அரசு பள்ளிகளுக்கு இவர்கள் செய்த உதவிகளும் இதுவரை வெளிச்சத்திற்கு வரவில்லை. அதேபோன்று, அரசு பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக உதவுகின்ற தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் தகவல் தொகுப்பையும் பெறமுடியவில்லை.

இக்குறைகளை களையும் வகையில் மேற்கண்டவர்களின் மூலம் இணையவழி நிதி திரட்டும் முகமையை ( https://contribute.tnschools.gov.in ) பள்ளி கல்வித்துறை உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த இணைய முகமை நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதால், அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்களும், நிறுவனங்களும் ஆர்வத்துடன் பங்களிக்க முன்வருவார்கள். வெளிப்படைத்தன்மையின் காரணமாக அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு பொதுமக்களின் பங்களிப்பும் அதிகரிக்கும்.

இதன்மூலம் இரண்டு சதவீத சி.எஸ்.ஆர். நிதியைப் பெறவும் வாய்ப்புகள் ஏற்படும். நன்கொடைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதால், பலர் அதிகளவில் தங்களது பங்களிப்பை அளிக்க முன்வருவர். மேலும், அரசு பள்ளிகளின் முன்னாள் மாணவர்களின் தகவல் தொகுப்பையும் உருவாக்க இயலும்.

இணையவழியில் திரட்டப்படும் நிதியானது, அதற்கென தொடங்கப்பட்டுள்ள தனி வங்கி கணக்கில் பெறப்படுவதுடன், அந்த நிதி தொடர்பான விவரங்களை பொதுமக்கள் இணையவழியில் நேரடியாக அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு திரட்டப்படும் நிதிக்கு தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் தொடர்பு அலுவலகமாக செயல்படும். அக்கழகத்தின் பொருளாளரும், செயலாளரும் தொடர்பு அலுவலர்களாக இருந்து நிதி மேலாண்மை செய்வார்கள்.

மேலும், இணைய வழிக்கற்றலுக்கு உதவும் டிக்‌ஷா இணையதளத்தில், தமிழகமானது 313 பாடப்புத்தகங்களில், 9,064 விரைவு துலங்கல் குறியீடு (கியூ.ஆர். கோட்) மூலம் 10 ஆயிரத்து 199 கற்றல் வளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதுவரை இத்தளத்தினை 4.92 கோடி பேர் ஸ்கேன் செய்தும், 2.39 கோடி பேர் தரவிறக்கம் செய்தும் பயன்படுத்தியுள்ளனர். டிக்‌ஷா செயலியை பயன்படுத்துவதில் சிறந்த நான்கு மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் இருப்பதாக தெரிவித்து தமிழகத்துக்கு முன்னோடி மாநிலத்திற்கான விருதை வழங்கி மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது.

இணையதள தொடக்க விழா நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், பள்ளி கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.