தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தில் அரசு நிதியுடன் 25 சதவீதம் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு தாரைவார்க்கப்படுவதால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து பள்ளிகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது.

அண்டை மாநிலங்களைப் போல பள்ளிகளைத் தரம் உயர்த்தி மாணவர் சேர்க்கையை மேம்படுத்த வேண்டுமென கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இல் அறிமுகமான நிலையில், தமிழகத்தில் 2017-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களின் எண்ணிக்கை 60 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். 90 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும், 120 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும், 150 மாணவர்களுக்கும் மேல் இருந்தால் 5 ஆசிரியர்களும், ஒரு தலைமை ஆசிரியரும் இருக்கலாம்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் அளவில், ஏழைத் தொழிலாளர்களின் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும். இவர்களுக்கான பள்ளிக் கட்டணத்தை மாநில அரசு கணக்கிட்டு தனியார் பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது.

2019-ஆம் ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2018-19-ஆம் கல்வியாண்டில் ஒரு லட்சத்துககும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் படித்து வந்த இந்த மாணவர்கள் கல்வி அதிகாரிகள் முன்னிலையில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இந்தத் திட்டத்தில் 5 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், இதற்காக ரூ.900 கோடி அரசு செலவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், சுமார் 1,000 அரசுப் பள்ளிகளை மூட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் கைவிடப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக, ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டாலும் தனியார் பள்ளி மோகத்தால் அது பலனளிக்கவில்லை. இருப்பினும், ஆசிரியர்களின் விடா முயற்சியால் அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தனியார் பள்ளிகளில் அரசு செலுத்தும் கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம், போதிய மாணவர் சேர்க்கை இல்லை எனக் கூறி தனியார் பள்ளிகள் திடீரென மூடப்படுவது போன்ற காரணங்களால் அரசுப் பள்ளிக்கே மீண்டும் வருகின்றனர். ஆனால், மாணவர்கள் எண்ணிக்கை போதிய அளவில் இல்லை எனக் கூறி, கிராமப்புற அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அந்த மாணவர்கள் சொந்த கிராமத்தில் பயில முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

நிகழ் கல்வியாண்டில் மட்டும் 46 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிகிறது. 10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1,500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக செயல்படுவதால், அடுத்த கல்வியாண்டில் அவை மூடப்படும் அபாயம் உள்ளது. போதிய மாணவர்கள் இன்றி சுமார் 2 ஆயிரம் பள்ளிகளை நூலகங்களாக மாற்றவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால், கிராமப்புற மாணவர்களுக்கு போதி மரங்களாக திகழும் அரசுப் பள்ளிகள் இல்லாத நிலை ஏற்படும். மேலும், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தியே தொடக்கக் கல்வியை பெறும் நிலைக்கு கிராமப்புற மாணவர்கள் தள்ளப்படுவர்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அப்படியே ஏற்பதால், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்களில் எல்கேஜி முதல் ஒன்றாம் வகுப்பு வரை அதிகளவில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்களுக்கான கல்விக் கட்டணமாக அரசு சார்பில் ஆண்டுக்கு ரூ.120 கோடி செலவிடப்படுகிறது.

இதைக் கைவிட்டு அந்தப் பணத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தரமான கல்வியை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்று விகிதாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளை அருகிலுள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பினர் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் அந்த மாநில அரசின் நடவடிக்கையால், அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 3.47 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

கர்நாடக அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கோரியும், அரசு, நிதிஉதவி பெறும் பள்ளிகள் இல்லாத இடங்களில் மட்டும் தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர்கள் சேர்க்கையை செயல்படுத்தினால் போதும் எனக் கூறி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கையை நிறுத்திவைத்துள்ளது. தமிழக அரசும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.