அன்னவாசல்,செப்.16: சர்வதேச ஓசோன் தினத்தையொட்டி உருவம்பட்டி அரசுப்பள்ளியில் ஊர்ப்பொதுமக்கள் மரம் நட்டு ஓசோன் தினத்தை கொண்டாடினார்கள்.

 புதுக்கோட்டை மாவட்டம்,அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  ஓசோன் தின கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளித்தலைமையாசிரியை ஜெ.சாந்தி வரவேற்றுப் பேசினார்.

விழாவில் வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி வளாகங்களில் மரங்களை நட்டுப் பேசியதாவது:
நமது கண்ணுக்குப் புலப்படாத அந்த ஓசோன் படலத்திற்கு மானசீகமான நன்றிகளைத் தெரிவிக்கவும், இன்று நம்மை அறியாமல் நமது நடவடிக்கைகள் காரணமாக ஓசோன் படலத்திற்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை அனைவரும் உணரச் செய்யவும், அதே நேரத்தில் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உறுதி செய்யவும் ஆண்டுதோறும் உலக நாடுகள் செப்டம்பர் 16ம் தேதியை ஓசோன் தினமாக நினைவு கூறுகின்றன.

ஓசோன் இயற்கையை பாதுகாப்பதிலும் பருவநிலை மாற்றங்களிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறக் கூடிய நச்சுவாயுக்கள் கார்பன்மோனாக்ஸைடு,கார்பன்டை ஆக்ஸைடு  மற்றும் குளிரூட்டிகளில் இருந்து வெளியேறக்கூடிய குளோரோ புளுரோ கார்பன் போன்ற தீங்கு விளைவிக்க கூடிய வாயுக்கள் வெளியேறி ஓசோன் படலத்தை அழிக்கிறது.ஓசோன் படலம் பாதிக்கப்படும் பொழுது   பூமியின் வெப்பம் உயர்ந்து துருவப்பகுதிகளில்  உள்ள பனி உருகி கடலின் நீர் மட்டம் உயர்ந்து நிலப்பரப்பு குறைகிறது.மேலும் சூரியக்கதிர்கள் நேரடியாக பூமியை தாக்கும் பொழுது  பருவநிலையில்  மாற்றத்தை ஏற்படுத்தும்.அப்பொழுது  மனிதனுக்கு தோல் நிறமிப் புற்றுநோய், கண்பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படும். புவியில் உள்ள அனைத்து தாவரங்களிலும் பச்சையங்கள் பாதிக்கப்பட்டு விளைச்சல் இல்லாமல் தாவர இனமே அழிவை சந்தித்து விடும். நீர் மற்றும் நிலத்தில் வாழும் விலங்குகள் இறக்க நேரிடும் இதனால் புவியில் உணவு சங்கிலி பாதிக்கப்படும். இதற்கு 
நாம் அதிகம் பயன்படுத்தும் குளிர் சாதனங்களான ப்ரிட்ஜ் மற்றும் ஏசி  இயந்திரங்களில் நிரப்பப்படும் வாயுக்களே ஓசோன் பாதிப்புக்கு பெருமளவு  காரணம். இதுபோன்ற வாயுக்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.எனவே இங்கு வந்துள்ள பெரியோர்கள் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில் பள்ளிமேலாண்மைக் குழு தலைவர் கருப்பையா, வார்டு உறுப்பினர் முத்தன்,ஊர் பிரமுகர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இடைநிலை ஆசிரியர் கு.முனியசாமி செய்திருந்தார்.Join Telegram& Whats App Group Link -Click Here