எனது நூல்களை எந்த காரணம் கொண்டும் வாங்கக் கூடாது''- இறையன்பு ஐ.ஏ.எஸ்!
தமிழகத்தில் திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று கொண்டதை அடுத்து பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதே போல் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ''எக்காரணத்தைக் கொண்டும் பள்ளிக் கல்வித் துறையினர் தாம் எழுதிய நூல்களை வாங்க வேண்டாம்'' என்று தலைமைச் செயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு தலைமை செயலர் வெ. இறையன்பு இன்று விடுத்துள்ள அறிவிப்பு விவரம் வருமாறு:
நான் பணி நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களைத் தொடுத்தும் சில நூல்களை எழுதி வந்தேன். அவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை. இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக பள்ளிக் கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன்.
நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்கிற உத்தரவே அது. பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றி களங்கம் விளைவிக்கும் என்பதால்தான் இத்தகைய கடிதத்தை எழுதியிருக்கிறேன். எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம்.
அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை அது.
அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என்று அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன்.
இவ்வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, தமிழ்நாடு தலைமை செயலர் வெ. இறையன்பு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..