துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான  தேதி நீட்டிப்பு: TNPSC அறிவிப்பு

அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட துறைத் தேர்வுகளில் 129 தேர்வுகளின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

எந்தெந்தத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்ற பட்டியல் கடந்த 8ஆம் தேதியன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் 14 தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்துத் தேர்வுகளும் இடம்பெற்றுள்ளன.

கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வரும் காரணத்தால் தமிழக அரசால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 14 தேர்வுகளின் முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி அன்று வெளியிடப்படும்.

மேலும், தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மே மாதத் துறைத் தேர்வுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது''.


இவ்வாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.