தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக இன்று ஆலோசனை 

கொரோனா பரவலுக்கு மத்தியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது என்பது குறித்து அண்மையில் மாநில அரசுகளுடன் மத்திய கல்வித் துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.

இந்த கூட்டத்திற்கு பிறகு, மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக மோடி அறிவித்தார். இந்த நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்தே மாநில அரசும் பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து ஒரு முடிவை அறிவிக்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாநில கல்வித்திட்ட பிளஸ் 2 தேர்வு பற்றி ஆலோசனை நடக்கிறது. சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு குறித்த அறிவிப்புக்குப் பிறகே, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முடிவு என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே தெரிவித்த நிலையில் நேற்று சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது