ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த வெர்ஷன் ஏற்கெனவே ரெடியாகிவிட்டது. செல்லமாக ஆண்ட்ராய்டு Q என அழைக்கப்பட்டுவந்த ஆண்ட்ராய்டின் பத்தாவது வெர்ஷனான இதன் பீட்டாவை பலரும் தற்போதே பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அதிகாரபூர்வமாக இதற்கு ஒரு பெயர் கொடுக்கப்படாமல் இருந்தது. இப்போது அந்தப் பெயர் என்னவென்பதை அறிவித்திருக்கிறது கூகுள்.
மார்ஷ்மெல்லோ, ஐஸ்க்ரீம் சான்விட்ச், ஓரியோ, பை என ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு உணவுப்பொருள்களின் பெயர்கள் வைக்கப்படுவது வழக்கம். இம்முறை Q-வில் தொடங்கும் ஒரு உணவுப்பொருளின் பெயரே வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறை இந்த வழக்கத்தைக் கைவிட்டிருக்கிறது கூகுள்.பத்தாவது ஆண்ட்ராய்டு வெர்ஷனான இதற்கு 'ஆண்ட்ராய்டு 10' என்றே பெயர் வைத்திருக்கிறது கூகுள்

Android 10
அடுத்து வரும் வெர்ஷன்களும் எண்களில் தொடரும். ஆப்பிளின் ஐஓஎஸ் வெர்ஷன்களுக்கு இப்படித்தான் பெயர் வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பு இருந்த ஆண்ட்ராய்டு லோகோவிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மாற்றம் இதற்கு ஒரு மாடர்ன் லுக்கை தரும் என்கிறார் ஆண்ட்ராய்டின் பிராண்ட் இயக்குநர் ஆடி காண்டன். பெயர், லோகோ மட்டுமல்லாமல் இந்த வெர்ஷனில் பல முக்கிய மாற்றங்களைக் காணவிருக்கிறது ஆண்ட்ராய்டு 10. பிரைவசிக்கு கூடுதல் கவனம், புதிய இன்னோவேடிவ் தொழில்நுட்பங்கள் எனப் புது பொலிவு பெறவிருக்கிறது ஆண்ட்ராய்டு 10. ஒரு மைல்கல் வெர்ஷனாகக் கருதப்படும் இது அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.